சுதந்திரம் என்றால் என்ன ?

சுதந்திரமாக இருப்பது என்றால் என்ன?

சுதந்திரத்தின் வரையறை

நம்மைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது  நாம்  தேர்ந்தெடுத்துள்ள  அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாக செயல்படுவதற்கும், சுதந்திரமாக பேசுவதற்கும், சுதந்திரமாக வாழ்வதற்கும் நமக்கிருக்கும் உரிமை ஆகும். கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பறவை அல்லது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதி போன்றோர் ஒரு வகையான சுதந்திரத்தை உணர்ந்திருக்கக்கூடும்.

ஆனால் இதுதான் உண்மையான சுதந்திரத்தின் முழுமையான வரையறையா? 

ஆம், இது வெறும் அரசியல் சார்ந்த சுதந்திரத்தின் வரையறையாக இருக்கலாம். ஆனால் சுதந்திரம் என்று சொல்லும்போது, தார்மீக சுதந்திரம் அல்லது ஆன்மீக சுதந்திரம் போன்ற பல்வகை சுதந்திரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

அரசியல் சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகளுக்குப் பிறகும், இப்பொழுது நாம் தார்மீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் சுதந்திரமாக  இருக்கிறோமா? புறம்பான சுதந்திரத்தை விட முழுமையான சுதந்திரத்தை அடைவதில் நாம் அதிக மகிழ்ச்சியடைய வேண்டும்.

நாம் அனைவருமே, அடிப்படையில் பாவத்தின் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருக்கிறோம். நாம் பாவிகளாகப் பிறந்ததாலும், பாவமானது நமது ஆள்த்தன்மையின் ஒவ்வொரு அம்சத்திலும் இருப்பதாலும், இந்த பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து  நாம் விடுதலை பெற விரும்பினாலும், நம்மை நாமே விடுவித்துக் கொள்ள முடிவதில்லை.

கடவுள் தம்முடைய மகிமைக்காகவும், தம்முடனான ஐக்கியத்திற்கெனவும்   மனிதனைப் படைத்தார் என்று வேதாகமம்  நமக்குச் சொல்லுகிறது. முன்னொரு காலத்தில் மனிதன் கடவுளுடன் பரிசுத்தமான மற்றும் இனிமையான ஐக்கியத்தில்  இருந்ததுமன்றி, அப்பொழுது அவன் பாவத்திற்கும் அடிமையாக இருக்கவில்லை.

இன்னும் அடிமைத்தனத்தில் இருக்கிறீர்களா?

ஆனால் நம் ஆதி பெற்றோர்கள் கடவுளுடைய கட்டளையை மீறினர், இதனால்  சுதந்திரத்தை இழந்தனர். இதன் விளைவாக, முழு மனித இனமும் பாவத்தின் கீழ் அடிமைகளானார்கள். ஆதி பெற்றோர்கள் கடவுளுடைய படைப்பின் நோக்கத்தைக் கைவிட்டு, பாவத்திற்கு இணங்கினர். அதன் விளைவாக, முழு மனித இனமும் கடவுளுடனான  உறவிலிருந்து துண்டிக்கப்பட்டு இப்பொழுது பாவத்திற்கு  உட்பட்டிருக்கிறது.

இந்தப் பாவத்தின்  விளைவு சரீர மரணம் மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் நித்திய மரணமும் ஆகும். அதனால் தான் மனிதன் இன்று ஆவிக்குரிய நிலையில் மரித்தவனாகவும்  மற்றும் தேவனிடமிருந்து விலகினவனாகவும் இருப்பதைக் காண்கிறோம்.

உண்மையான சுதந்திரத்திற்கான வழி

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய பாவங்களுக்குப்  பிராயச்சித்தமாக  சிலுவையில் தன் உயிரை  விட்டு,  மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இதனால்  அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும்  அழிந்துபோகாமல், நித்திய ஜீவனைப் பெறுகின்றனர் . கர்த்தராகிய இயேசுவிடம் தஞ்சமடைகிற எவரும், தங்கள் வாழ்க்கையில் உண்மையான மற்றும் முழுமையான சுதந்திரத்தைப் பெறவும், அந்த சுதந்திரத்தை உணர்ந்து அனுபவிக்கவும் முடியும்.