உண்மையான அமைதியை அனுபவிப்பது எப்படி?

Uṇmaiyāṉa amaitiyai

அமைதிக்கான நோபல் பரிசு

அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் அவர்களால் 1895 இல் நிறுவப்பட்டது. அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு “யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ” அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இந்த விருது எல்லா வருடங்களும் வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை 19 தடவை வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் நோபல் பரிந்துரை குழுவால் மேற்கூறிய வரையறைக்கு ஏற்ற எந்தவொரு நபரையோ அல்லது பணியையோ  கண்டுபிடிக்க முடியவில்லை.

உண்மையான  அமைதி என்றால் என்ன?

இன்றைய உலகில் அமைதியானது மிகவும் நாடப்படுகிற ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது ஒரு தேசமோ, அல்லது  ஒரு குடும்பமோ, அல்லது ஒரு தனி நபரோ, பணக்காரரோ, ஏழையோ யாராயிருந்தாலும் அமைதியை நாடக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

உண்மையில் அமைதி என்றால் என்ன? தனிப்பட்ட முறையில், ஒரு நபர் சந்திக்கும் உட்புற அல்லது வெளிப்புற சூழ்நிலைகளின் அழுத்தம் அந்த நபரின் நிதானமான மன நிலையை பாதிக்காமல் இருப்பதே அமைதியாகும். நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இவ்வாறாக கூறுகிறார்: “அமைதி என்பது தேசங்களுக்குள் இருக்கும் உறவல்ல.  அது ஆன்மாவின் அமைதியால் வரும் மனநிலையே ஆகும். அமைதி என்பது வெறுமனே போர் இல்லாத சூழல் மட்டுமல்ல. அமைதி ஒரு மனநிலையும் கூடத்தான். அமைதியான மக்கள் மட்டுமே நிலையான அமைதியை பெற முடியும்.”

நான் எப்படி ஒரு அமைதியான நபராவது?

உண்மையிலேயே நான் எப்படி அமைதியான நபராக மாற முடியும்?

நான் எங்கிருந்தாவது அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இவ்வாறாக கூறுகிறார், “அமைதியை பலத்தாலோ அல்லது ஆற்றலாலோ தற்காத்துக் கொள்ள இயலாது, அது புரிதலாலே மட்டுமே அடையமுடியும்.”

இதுவரை யாராவது உலகிற்கு அமைதியை கொண்டுவந்து சாதித்திருக்கிறார்களா?

ஆம், அது வேறு யாருமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே!

அவர் பூமியில் வாழ்ந்தபோது, கலங்கிய மனம் கொண்டவர்களுக்கு அவர் உண்மையான அமைதியை வழங்கினார். அவர் இந்த உலகத்தை விட்டுச் சென்றபோது, அவருடைய அமைதியையே நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்.

இயேசு இவ்வாறாக கூறியிருக்கிறார்: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.                                              உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் .” யோவான் 16:33

மேலும் இவ்வாறாக இயேசு கூறுகிறார்: “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” யோவான் 14:27

இயேசு தரும் இந்த உண்மையான சமாதானத்தை உங்களால் எப்படி அனுபவிக்க முடியும்? அது மிகவும் எளிது. இயேசுவினிடத்தில் வாருங்கள், உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள், அவரை உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக  ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” பிலிப்பியர் 4:7