நீங்கள் இந்த கிறிஸ்துமஸ் பரிசை இன்னும் பெறவில்லையா?

Vivarikka muṭiyāta paricu

கிறிஸ்துமஸ் காலம்

இதோ மீண்டும் ஒரு கிறிஸ்துமஸ் காலம்!  உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை மகிழ்ச்சியுடனும் பலவித வேடிக்கை விநோதங்களுடனும் கொண்டாடுகிறார்கள். பல குழந்தைகள், கிறிஸ்துமஸ் தாத்தா கொண்டு வரும் பரிசுகளுக்காக காத்திருக்கிறார்கள். வணிகர்களுக்கும் இது சிறந்த காலமாகும். மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக பரிசுகள் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்குவதால் வணிக விற்பனை வியக்கத்தகு அளவில் அதிகரிக்கிறது. ஆனால், பண்டிகையின் அனைத்துக் கூச்சல்களினாலும் ஆரவாரங்களினாலும், கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை இழந்து விடுகிறோம்.

எல்லா பரிசுகளையும் கொடுப்பவரே, எப்படி தாமே ஒரு பரிசாக மாறினார் என்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.

கிறிஸ்துமஸ்க்கான காரணம்

 காலம் துவங்கும் முன்னரே கடவுள் இருந்தார். அவர் உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினார். தம்முடைய அன்பினாலே, தேவன் மனிதனை தம்முடைய சாயலிலே உண்டாக்கி, ஒரு அழகான தோட்டத்தில் அவனை வைத்தார். மனிதன் கடவுளின் கட்டளைகளை மீறினான். இந்தக் கீழ்ப்படியாமை தான் பாவம், அது மனிதனை தேவனிடத்திலிருந்து பிரித்தது. மனுஷரின் பாவத்தினிமித்தம் தேவன் மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக அழித்திருக்க முடியும். ஆனால் தேவனோ  எல்லா மக்களின் பாவங்களுக்கும் முடிவான பலியாக ஒரு மீட்பரை ஒரு நாள் இந்த பூமிக்கு அனுப்புவதாக உறுதியளித்தார். (ஏசாயா 53).

“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” (ரோமர் 6:23).

இயேசு, தேவனுடைய குமாரன். அவர் பாவமில்லாமல் வாழ்ந்தார். அவருடைய எல்லா வழிகளிலும் குற்றமில்லாத பரிபூரணராக இருந்தார். முப்பது வயதில், இயேசு தனது பிதாவான தேவனைப் பற்றி மக்களுக்கு பிரசங்கிக்கத் தொடங்கினார். இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வை அளித்தார், பலரின் நோய்களைக் குணப்படுத்தினார், இறந்தவர்களையும் கூட உயிரோடு எழுப்பினார். இது போன்ற பல அற்புதங்களைச் செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகத்தில் நித்திய ஜீவனைப் பெறுவதற்கான வழியைக் மக்களுக்குக் கற்பித்தார். பின்னர் அவர் தனது உயிரை முழு உலகத்தின் பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார்.

வேதாகமம், யோவான் 3:16-ல் இவ்வாறு சொல்கிறது.

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”

சிலுவையில் உன்னதமான பலியாக மரிப்பதற்காகவே  இயேசு இந்த பூமிக்கு வந்தார். அவருடைய மரணத்தின் மூலம், எல்லா பாவங்களுக்குமான விலை கொடுக்கப்பட்டுவிட்டது. இனி பாவத்திற்காக பலி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு இரட்சகரை அனுப்புவதாக சொன்ன கடவுளின்  வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதல் இதுவே ஆகும்.

பொல்லாதவர்களால் இயேசு கொல்லப்பட்டாலும், மரணத்திற்கு அவர் மீது எந்த அதிகாரமும் இல்லாதிருந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, வெற்றிச்  சிறந்தவராக இயேசு கல்லறையிலிருந்து உயிரோடு எழுந்தார். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், அநேகர் அவரைப் பார்த்தார்கள். பின்னர் ஒரு நாள், தம்மைப் பின்பற்றுபவர்களை ஆசீர்வதித்த பிறகு, அவர் பரலோகத்திற்குச் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

பெற்றிருக்க வேண்டிய பரிசு

நாம் இயேசுவை விசுவாசித்து நம்முடைய வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புக்கொடுக்கும் போது, அவருடைய இரத்தம் நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இந்த இரட்சிப்பின் பரிசை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் கடவுளிடம் மறுபடியும் இணைக்கப்படுகின்றோம். இயேசு நம்முடைய தனிப்பட்ட இரட்சகராக மாறுகிறார். மேலும் அவருடைய பிள்ளையாக இருப்பதன் ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்க முடியும்! ஒரு நாள் இயேசு மறுபடியும் வருகிறார். உண்மையான விசுவாசிகள் அனைவரையும் அவர் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே அவர்கள் ஆண்டவருடன்  என்றென்றும் வாழ்வார்கள்.

அன்புள்ள நண்பனே, இரட்சிப்பின் பரிசை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. ஜீவனுள்ள கடவுளின் மகன்கள் மற்றும் மகள்கள் என்று அழைக்கப்படுவதை விட சிறந்த பாக்கியம் எதுவும் இல்லை. கடவுளின் இந்த விவரிக்க முடியாத மாபெரும் பரிசை நீங்கள் தவறவிட்டால், உலகின் அனைத்து பரிசுகளும் உங்களுக்கு பயனற்றதும் மதிப்பற்றதும் ஆகிவிடும்.