அன்பும் உறவும் – ஓர் பொதுவான கருத்து
‘அன்பு’ ‘உறவு’ என்ற வார்த்தைகளை கேட்கும்போதெல்லாம் நான் மட்டுமன்றி , பொதுவாகவே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காணப்படும் உறவு என்று தொடர்புபடுத்தி பார்ப்பதே நம் சமுதாயத்தின் இயல்பாக இருக்கிறது. இத்தகைய உறவை சமூகம் மிக முக்கியமானதாக கருத்துவதுமன்றி, ‘அன்பு’ ‘உறவு’ ஆகிய பதங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் இணக்கமான பதங்களாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனாலும் உறவு என்ற வார்த்தையின் அர்த்தம் ஏதேனும் இரு நபர்களுக்கிடையியே இருக்கும் ஒரு தொடர்பு என்பதே உண்மையாகும். தந்தை-மகள், தாய்-மகன், ஆசிரியர்-மாணவர் அல்லது யாரேனும் இரு நண்பர்கள் என்று இவர்களுக்குள் காணப்படும் ஒருவிதமான தொடர்பு இதற்கு சில உதாரணங்களாகும்.
எந்த ஒரு உறவானாலும் இரு நபர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகள், விருப்பங்கள் , எதிர்பார்ப்புகள் மற்றும் ஒருவரையொருவர் சகித்துக்கொள்ளுதல் போன்றவை மூலதனமாக இருப்பதை காணமுடியும்.
அன்பு என்னும் காரணி
உறவுகளுக்குள்ளும் அசௌகரியங்கள் இல்லாமல் இல்லை. ஆனாலும் முடிவில் ‘அன்பு’என்னும் பொதுவான காரணத்தினால், அத்தகைய அசௌகரியங்கள் மத்தியிலும் ஒருவரோடுள்ள உறவை நாம் தொடருகிறோம்.
என்னதான் தவறு செய்தாலும் அதன் விளைவாக எத்தகைய தண்டனை வழங்கப்பட்டாலும், பெற்றோருக்கும் பிள்ளைக்குமான உறவு தொடரத்தான் செய்கிறது. குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவரானாலும் அல்லது வகுப்பறையில் அதிக பிரச்சனை கொடுக்கும் மாணவரானாலும், அவருக்கும் ஒரு ஆசிரியரின் உதவியும் வழிநடத்தலும் தொடர்கிறது. வாக்குவாதங்கள் மாற்றுக்கருத்துக்கள் மத்தியிலும் நண்பர்கள் தங்கள் நட்பை தொடருவதில் கவனமாக இருக்கிறன்றனர்.
பாருங்கள், இது எத்தனை எளிமையானது? அன்புதான் எந்த ஒரு உறவையும் உருவாக்கி, நிலைநிறுத்துகிறது. நமக்கு எவ்வளவு அன்பு கிடைக்கிறது என்ற அடிப்படையில் தான் நாம் உறவுகளை தேர்ந்தெடுக்கிறோம். அதேசமயத்தில் மற்ற நபரிடத்தில் அந்த அன்பை திரும்ப கொடுக்கவும் முயற்சி செய்கிறோம். எந்த ஒரு உறவானாலும் அதை இணைக்கும் காரணி அன்ப. உண்மையான அன்பு அந்த உறவை நீட்டிப்பதற்கும் உதவிசெய்கிறது.
எல்லோரையும் நேசிக்கும் ஓர் பரம தகப்பன்
இந்நேரத்தில், நான் உங்களுக்கு இன்னொரு தகப்பன்-பிள்ளை உறவை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஆம், உயிருள்ள கடவுளுக்கும் அவரது பிள்ளைக்கும் இடையேயான உறவு அது.
ஒரு பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, தேவன் வல்லமையுள்ளவர் அதிகாரம் படைத்தவர் மாத்திரமல்ல. அவர் ஒரு அன்பான தெய்வம். பரிசுத்த வேதாகமத்தில் I யோவான் 4:16 சொல்லுகிறது: “தேவன் அன்பாகவே இருக்கிறார்”. இங்கு தேவன் நம்மீது அன்புவைத்தார் , அன்புவைத்திருக்கிறார் அல்லது அன்பு வைப்பார் என்று சொல்லப்படவில்லை. மாறாக , “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதன்றோ?
அண்டசராசரத்தின் தேவன், உங்களையும் என்னையும் படைத்த தேவன், அவர் அன்பின் தேவனாக இருக்கிறார். அவர் நம்மை தமது நித்தியமான அன்பால் நேசிக்கிறார். நாம் அவரோடு ஒரு அன்பின் ஐக்கியத்திற்குள் வரவேண்டுமென்று விரும்புகிறார். உலகில் நமக்கிருக்கும் உறவுகளை போலவே, ஒரு வெளிப்படையான தொடர்பை எதிர்பார்க்கிறார்: நாம் பேசுவதை அவர் கேட்கவும், அவர் பேசுவதை நாம் கேட்கவும் வேண்டுமென வாஞ்சிக்கிறார்.
நமது உலக உறவுகளுக்கும், உயிருள்ள தேவனோடு அவர் பிள்ளையாகிய நமக்கு இருக்கும் உறவுக்கும் உள்ள ஆச்சர்யமான ஒரு குணாதிசியம் என்னவென்றால், நமக்காக அவர் எப்பொழுதும் இருப்பார் என்பதே.
வேதாகமம் சொல்லுகிறத: “… நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரேயர் 13:5)
இதுதான் தேவனின் நித்தியமான அன்பு. உலக உறவுகளைப் போல வாக்கு கொடுத்துவிட்டு பின்னர் அதை காப்பாற்றமுடியாமல் போவது போலில்லாமல், இந்த அன்பின் தேவன் சொல்லுவது, என்ன நடந்தாலும் எந்த சூழ்நிலையிலும் அவர் நமக்காக இருப்பார் என்பதே. ஆம், நம்மை தேற்றுவதற்கு, வழிநடத்துவதற்கு, பாதுகாப்பதற்கு நிச்சயமாக அவர் இருப்பார்.
இந்த அன்பின் தேவனோடு ஒரு அன்பின் உறவில் இணைவதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான்: அவரை உங்கள் வாழ்க்கையின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த வேதாகமம் மீண்டும் சொல்லுவது “தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16)
உலகத்தில் நமக்கிருக்கும் மனித உறவுகள் வரம்புகளுக்கு உட்பட்டது மட்டுமன்றி அது தாற்காலிகமானது. பரம தகப்பனுடனான நம்முடைய உறவோ மாறாக, நித்தியமான தேவ அன்பினால் இணைக்கப்பட்டிருக்கிறது.
இன்று இந்த அன்பின் தேவனோடு உறவுகொள்ள நீங்கள் ஆயத்தமா ?